ரஜினிகாந்தின் விமர்சனம் உள்பட தோராயமாக தொன்னூற்றொன்பது விமர்சனங்களை படித்து முடித்திருப்பீர்கள். அதோடு இதையும் படித்து சென்சுரி அடித்து விடுங்கள்.
'நான் கடவுள்' என்று இந்த படத்திற்கு பாலா பெயர் வைத்த போதே தெரியும் அவர் கடவுளுக்கு எதிர் மறை கருத்தையே வைக்க போகிறார் என்று. அப்படியே செய்தும் இருக்கிறார். முதல் மூன்று படத்தில் ஆண்மை திரளான கதாநாயகன் பாத்திரத்தை படைத்த பாலா இந்த படத்தில் தாமே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் அகோரிகளை கதாநாயகர்களாக்கியிருக்கிறார். அகோரிகள் காசியில் மிதக்க விடும் பிணங்களை பிடித்து அறுத்து நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று சொல்கிறார்கள். இதற்கு அத்தாட்சியாக இருக்கும் ஒரு கூகிள் வீடியோ பார்த்தேன். அது உண்மை தானா அல்லது சித்தரிக்கப்பட்டாதா?, தெரியவில்லை. நேரில் சென்று பார்த்தால் தான் தெரியும். (வாங்களேன் காசிக்கு ஒரு டூர் போவோம்!?).
படத்தில் முன்வைக்கப்படும் கருத்து இரண்டு. 'வாழ தகுதியில்லாதவர்களுக்கு அகோரிகள் தரும் தண்டனை மரணம்', 'வாழ இயலாதவர்களுக்கு அகோரிகள் தரும் மரணம் வரம்'. இந்த இரண்டு கருத்தை வைத்தே திரைக்கதை பிண்ணப்பட்டு முடிவில் முடிவும் சொல்லப்பட்டுள்ளது. எல்லா படத்திலும் சொல்லப்படும் முடிவு எல்லோருக்கும் உடன்பாடு இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்த படமும் இப்படி தான் எனக்கு.
அகோரி ஆர்யா நமக்கு ஆர்யா என்று தெரிந்தாலும் அவரை கண்டு கொள்ளமுடியாத அளவுக்கு தலைமுடி வைத்து கொண்டு இருக்க, 'பெத்த அப்பனுக்கு தெரியாதா' என்று ஒரு இரத்த பந்த வரியை வைத்துக்கொண்டு பதினான்கு வருடங்களுக்கு முன் விட்டு சென்ற மகனை கண்டு கொள்வது எல்லாம் பாலாவுக்கே வெளிச்சம். இந்த கேள்வி எல்லாம் எழாமல் இருக்க தான் தமிழ் பார்முலா முதுகில் மச்சம், காலில் மச்சம், தொடையில் மச்சம் இருக்கிறதே. இந்த பார்முலாவை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பாலா மூன்று வருடத்தில் இதற்கு புதிதாக எதையாவது யோசித்திருக்கலாம்.
ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் அறிமுக காட்சிகள் நிச்சயம் எல்லோர் மனதையும் உருக்கும். தாண்டவனிடம் (பிதாமகனில் விக்ரமிடம் ஜெயிலில் அடி வாங்கியவர் என்று நினைக்கிறேன்) வரும் புது பிச்சைக்காரர்களை ஒவ்வொருவராக தட்டிப் பார்த்தும், தூக்கிப் பார்த்தும் வரும் காட்சிகள் என் மனதை ஆழமாக பாதித்ததை விட அதை வியாபார காட்சியாக வைத்த பாலா மீது கோபமாக தான் வந்தது. இருப்பதை தான் அவர் காண்பித்தார் என்று நீங்கள் சொல்லலாம். இப்படிப்பட்ட அவலத்தை மற்ற படங்களில் ஊனமாக நடிக்க வைத்து அதன் கொடுமை சித்தரிக்கப்படுமே தவிர, இப்படி உண்மையான ஊனமுற்றவர்களை காட்டி செய்யப்படுவதில்லை. இன்னும் சில படங்களும் இப்படி செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் வரிசைப்படித்தினால் அந்த படங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. மற்றவர்களும் செய்வதால் தவறு, சரி என்று ஆகிவிடாது.
ஆர்யா அகோரி பாத்திரத்திற்காக மெனக்கட்டிருக்கிறார். உண்மை தான். நீளமான முடி. தாடி, சிவப்பு கறை பற்கள், தலை கீழ் தவம், நடை, உடை, பேசும் பேச்சில் ஒரு அகோரம். ஆர்யாவுக்கு மொத்தத்தில் ஒரு பக்க வசனங்கள் தான் என்றாலும் ஜெயமோகனின் 'என்னடா சாமி? பேசினாலும் சாமி, பேசலனாலும் சாமி' வசனங்கள் கூர்மையானவை. கேரளாக்காரன் பிச்சைச்கார கிழவராக வரும் கவிஞர் விக்கிரமாதித்தனின் கையில் இருந்து அந்த ஊனமுற்ற பையனை பறித்து செல்லும் போது, அருகில் இருக்கும் இன்னொரு பிச்சைகாரர் 'சாமி பாத்துப்பார்' என்பது போல சொல்ல, 'சாமி, அந்த தே. ம ....' என்று கடவுளை திட்டி வசனம் சொல்லும் போதும், குருட்டு பிச்சைக்காரி பூஜாவை காப்பாற்ற சொல்லி அந்த திருநங்கை கை கால் இல்லாத அந்த சாமியாரிடம் முறையிடும் போது, 'இதுக்கு மேல நீ பேசலன்னா நீ சாமியே இல்லே' என்று சொல்லும் போதும், ஜெயமோகன் தைரியமாக பாராட்டப்பட வேண்டியவர்.
பாலாவின் பாத்திரப் படைப்பில் குருட்டு பிச்சைக்காரி பூஜா நிச்சயம் தேசிய விருதிற்கு தகுதியானவர். இயல்பாக இருக்க வேண்டி பார்வையை உண்மையாகவே மறைக்கும் லென்ஸ் கண்ணில் வைத்து கொண்டு பாட்டு பாடும் போதும், மலையில் ஏறும் போதும், அருகிலிருப்பவர் பேச்சை திடீரென உணர்ந்தவராக திரும்பும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் பாராட்டபட வேண்டியவர். 'பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா'வில் ஆட்டம் போட்டவரா இவர் என்றால் நம்ப முடியவில்லை. பாலசந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலா போன்ற மிக சில இயக்குனர்களால் மட்டுமே இப்படி நடிகர்களை நடிக்க வைக்க மன்னிக்கவும் பாத்திரங்களாக வாழ வைக்க முடியும். பூஜாவை ஹீரோயினாக பார்க்காமல் பிச்சைக்காரியாக மட்டுமே பார்த்தால் பாலியல் போன்ற விஷயங்களை தவிர்த்திருக்கிறார். ஆனாலும், பணம் வைத்திருப்பதாலேயே தன் காம ஆசைகளுக்கு தீனி போட நினைக்கும் அந்த அசிங்கமான முகத்தையும் எண்ணத்தையும் கொண்ட மனிதனை காண்பித்து இப்படிப்பட்ட கூட்டத்தில் அடிமையாக வாழும் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவும் இருக்கின்றன என்பதை பட்டும் படாமலும் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட விஷயங்கள் உண்மையாக நாட்டில் நடந்து கொண்டிருக்கிறதென்று நினைத்தால், சாதாரண எந்த மனிதனுக்கும் குலை நடுக்கும்.
பிச்சைக்காரர் கூட்டத்தில் வரும் திருநங்கை கிருத்திகாவை அவரின் பிறப்பை கேலி செய்யாமல் காட்டியிருப்பதற்கு பாலாவிற்கு சல்யூட் அடிக்கலாம் என்று அவசரப்படுவதற்குள் திருநங்கையாக இல்லை என்றாலும் திருநங்கையாக காட்டப்படும் நயன்தாராவையும், 'நயன்' என்று சொல்லி கேலிக்குள்ளாக்கும் போது அந்த சல்யூட்டை வாபஸ் வாங்க தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் நகல் எம்ஜிஆர், சிவாஜி, பாட்ஷா, புலிகேசி காட்சிகளை தவிர்திருக்கலாம். பிதாமகனில் சிம்ரன் காட்சிகள் போல இந்த படத்திலும் பாலாவால் கமர்சியல் காட்சிகளை தவிர்க்க முடியவில்லை.
இளையராஜா பற்றி எப்படி சொல்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு ஃபிரேமையும் இசையால் செதுக்கியிருக்கிறார். ஆரம்ப காசியின் பிரம்மாண்டமான பூஜைக்காட்சியில் பிரம்மிப்பையும், பிச்சைக்காரர்கள் அறிமுகக் காட்சியில் நம் உள் மனதை நம்மையறியாமல் அழ வைக்கும் சோகத்தையும், பூட்டு சங்கிலியால் ஊனப் பிச்சைக்காரி அடிவாங்கும் போது அதன் தாக்கத்தையும், ஆர்யா தலைகீழ் தவம் செய்யும் காட்சியில் ஒரு ஆளுமையையும் இசையால் கொடுத்திருக்கிறார். படத்தில் வரும் உடுக்கை சத்தமும், அதிர வைக்கும் ஒலியும் படத்தை பலப்படித்தியிருக்கிறது. என்னை கேட்டால், காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்த்திக்கு அதிகமாகவே இளையராஜா இசையை கொடுத்திருக்கிறார். மதுபாலகிருஷ்ணின் 'பிச்சைப்பாத்திரம்' பாடல் கேட்கும் போது ஏற்படுத்தும் தாக்கத்தை அது ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்வேன். அந்த பாடல் முழுவதும் வெள்ளை ஒளியில் படமாக்கப்பட்டுள்ளது. தவிர்த்து அதை ஹாஃப் வொயிட் மற்றும் மஞ்சள் நிறக்காட்சிகளாக எடுத்திருந்தால் இன்னும் அந்த பாடலின் தாக்கம் கூடியிருக்கும். குழந்தை ஏசு படத்தில் வரும் 'மாதா உன் கோவிலில்..' பாடல் மறுமுறை மதுமிதா பாடினாலும் இசை நிச்சயம் நெஞ்சை வருடுகிறது. அதே மெட்டில் 'அம்மா உன் பிள்ளை..' பாடலும் அருமை. ஹேராம் படத்தின் ரீரெக்காடிங் போல இளையராஜா இந்த படத்திற்கு தந்தாலும் அதை ஒளிப்பதிவாளர் சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
மீண்டும் படத்தின் முன்வைக்கப்படும் கருத்திற்கு வருவோம். 'வாழ தகுதியில்லாதவர்களுக்கு அகோரிகள் தரும் தண்டனை மரணம்' - இதற்கு ருத்ரன் கேரளாக்காரனையும் தாண்டவனையும் கொல்வது சரி என்றாலும், 'வாழ இயலாதவர்களுக்கு அகோரிகள் தரும் மரணம் வரம்' - இதற்கு குருட்டுப் பிச்சைகாரியின் கழுத்தை அறுத்து மோட்சம் தருவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதையும் தாண்டி இது மோசமான செயல் என்று தான் சொல்லவேண்டும். கஷ்டப்படும் ஆட்டை கருணைக் கொலை செய்வதில் தவறில்லை என்று காந்தி சொல்லியிருந்தாலும் அதையே செய்து கொண்டிருந்தால் இந்த பூமியில் பாதிக்கு மேல் இருக்க மாட்டார்கள். குருட்டுப்பிச்சைகாரியை போல் கஷ்டப்படும் அந்த பிச்சைக்கார கூட்டத்தில் எல்லோருக்கும் மோட்சம் தர வேண்டி வரும். இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தும் மகள் பூப்படைத்திருக்கும் போதும் கூட தன் மகன் வரமாட்டான், அவன் வேறு ஒரு உலகத்தில் வாழ்பவன் என்று புரிந்து கொண்ட மனதளவில் முதிர்ச்சியடைந்த ஒரு தாய் அளவிற்கு கூட அகோரி ருத்ரன் கதாபாத்திரம் முதிர்ச்சியடையாமல் இருப்பது, வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் தான் வரம் என்பது எல்லாம் பிதற்றல். ஏதோ யாரோ சொன்ன கருத்துக்கு காட்சிப்படுத்தியது போல் உள்ளது. உண்மையான வாழ்க்கைக்கு மிகவும் எதிரானது. அபத்தமானது. இந்த கருத்திற்காக பாலா மூன்று வருடம் தொலைத்திருக்கிறார் என்றால் இது ஒரு சிறந்த படம் என்று என்னால் சொல்லமுடியவில்லை.
கடைசியாக ஒரு எண்ணம். கடவுள் இருக்கிறார், எல்லோரையும் காப்பாற்றுவார் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் எனக்கு சக்திமான், சூப்பர்மான், ஸ்பைடர்மான் போன்ற கதாபாத்திரங்கள் உண்மையில் இருந்தால் தேவலை என்றே தோன்றுகிறது.
Posted by
அப்பு சிவா
1 comments:
nalla pathivu...
yaaro yengeyo sonna vaarthaigalai kaatchipaduththa bala-vukku avasiyam illai...aanAl yen seithaar, yenno nirbanthomo, theriyavillai???...padam paarkavillai, aanaal, pala muranpaadugal niranthavaigalaka iruppathaaga arinthen, padam paarkum aarvam, kurainthuvittathu...
Post a Comment