"கோச்சுக்காம இன்னும் கொஞ்சம் தள்ளுங்கப்பா, ஸ்டார்ட் பண்ணி பாக்கிறேன்"
நீ எங்கள விட நாலஞ்சு வருஷம் பெரியவனா போய்ட்டதால நீ சொல்றத எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியதா இருக்குன்னு மனசுல நெனச்சுட்டு மூச்சு வாங்க வாங்க என் நண்பனோட ரெண்டு மாமா பசங்களும் என் அத்தை பையனும் என் எய்ட் ஹன்றடை தள்ளிட்டு இருந்தாங்க.
நானும் படிக்காதவன் போல "லக்ஷ்மி! ஸ்டார்ட்... லக்ஷ்மி! ஸ்டார்ட்..." சொல்லி சொல்லி பார்த்தேன்... ஸ்டார்ட் ஆனா பாடில்லை.
இப்படி என் காரை தள்ளுவது இது கிட்டதட்ட ஏழாவது எட்டாவது முறை இருக்கும். கோடம்பாக்கம் குடியேறி மூன்று மாதத்தில் இந்த எய்ட் ஹன்றடை கொஞ்சம் அதிகமாகவே ஏமாந்து அதிக விலைக்கு வாங்கி விட்டேன். செகண்ட்ஸ் வாங்கும் போது எப்படி ஒரு கார் நல்லா இருக்குமோ அல்லது நல்லா இருப்பது போல் தயார் செய்து வைத்திருப்பார்களோ அதே போல என் காரும் நல்லா இருப்பது போலவே இருந்தது. காரை வாங்கின மாத்திரத்தில் கார் பிரேக் கேபிள் உடைந்து பிரேக் பிடிக்காமல் போக.... பயப்ப்படதீர்கள் (இப்ப யாரு பயப்பட்டா!??), காரை கிளப்பும் முன்பே தெரிந்து கொண்டதால் யாருக்கும் சொல்ல வேண்டிய கட்டயாத்திற்கு தேவை இல்லாமல் போய் விட்டது.
அப்பறம் பேக் வீல் ஜாம் ஆகி என் பணத்தை எல்லாம் பெட்ரோலாக குடித்தது, ஸ்டார்ட்-அப் மோட்டார் கோளாறு, பாலத்தின் மேல் நின்று ஸ்டார்ட் ஆக அடம் பிடித்து நாலு பேர் தள்ள வேண்டிய நிலை. அது தான் முதல் தள்ளல். பின் ஒரு மெக்கானிக் ஆக்சிலறேடரை அதிகம் வைக்க, கார்பறேடரில் புகை வர, உள்ளிருக்கும் பேன் சுத்தாமல் போக, மழை பெய்யும் போது தி-நகர் சென்று தண்ணி காருக்குள் வர, பேட்டரி சார்ஜ் ஆகாமல் போக இப்படி பட்டியல் பட்டியலாக என் கார் வரலாறு படைத்தது.
நான் காரை எடுக்கும் போதெல்லாம் கூடவே நாலு பேரை கூட்டிட்டு போவேன். ஏறும் வரை இவன் நல்லவன்டான்னு நெனச்சு ஏறுவாங்க. தள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதும் தான் தெரியும் என்னை பற்றி. காத்து வாக்கில வீட்டுப்பக்கம் வந்து போனவங்களும் என் காருக்கு பயந்து என் வீட்டு வழியை வேண்டுமென்றே மறந்துட்டாங்க. நானும் 'என்னப்பா வீட்டுக்கு வர்றதே இல்லை' ன்னு கேட்டா 'அது வந்து...இது வந்து' ன்னு காரணத்தை தேடினாங்க.
காரை தள்ளும் போதெல்லாம் கரகாட்டகாரன் மியூசிக் தான் எல்லார் காதிலும் கேட்கும். 'அத ஏன்டா என்ன பாத்து கேட்டே?' - சொப்பன சுந்தரி ரொம்ப கஷ்டப்படுதிட்டா. 'கார் ரொம்ப அடி வாங்கி இருக்கு போல!?' ன்னு ஒருவன் கேட்க காருக்கு சொப்பன சுந்தரின்னு பெயரே ஆகிவிட்டது. சரி அதை வர்ற விலைக்கு வித்டுவோம்ன்னு நெனச்சாலும் கார் இருந்த இடத்திலிருந்து நகரவே மாட்டேங்குது. 'சுந்தரி - ஸ்டார்ட்... ' 'என் கண்ணு இல்லே ஸ்டார்ட்' 'என் தங்கமே ஸ்டார்ட்' எல்லாம் சொன்னாலும் கேட்கல.
இதுல இன்னொரு விஷயம் நான் இருக்கும் பவர் அபார்ட்மெண்டில் கார் பார்க்கிங் எக்ஸ்ட்ரா 200/- ரூபாய் குடுக்கணும். பார்க்கிங் போனால் கிடைக்காதுன்னு இல்லாத காருக்கு பார்கிங் மூணு மாசம், மாசாமாசம் 200/- குடுத்தேன். 200/- ரூபாய் சும்மா குடுப்பானேன்னு 80,000/- போட்டு இந்த ஓடாத காரை வாங்கி வைத்தேன். அதோடு அப்போ அப்போ ஓட வைக்க வெட்டி செலவு வேறு.
யானை வாங்கின தீனி போட்டு தான் ஆகணும். வேறு வழி இல்லாமல், புது பேட்டரி மாத்தி இன்னொரு ஐயாயிரம் செலவு செய்து சொப்பன சுந்தரியை பவுடர் பொட்டெல்லாம் பூசி லக்ஷ்மின்னு பேர் மாத்தி கொண்டு வந்து வச்சிருக்கேன். இப்ப 'லக்ஷ்மி! ஸ்டார்ட்' ன்னு சொல்லாமலேயே ஸ்டார்ட் ஆகுது. டிசம்பர் 31 இரவு சென்னை காந்தி பீச்சில் என் காரில் சென்று கொண்டாடியாகிவிட்டது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அடுத்த நாள் ஜனவரி ஒன்று!
வெளியே போகலாம் என்று காரில் உட்கார்த்து ஸ்டார்ட் செய்தேன். முதல் முறை திணறியது, லக்ஷ்மியையும் அழைத்து கொண்டு 'லக்ஷ்மி! ஸ்டார்ட்' என்றேன். திணறியது. மறுபடியுமா.... என்று மூன்றாம் முறை சற்று அழுத்தமாக..... திணறி திணறி.... ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ஸ்டார்ட் ஆகி விட்டது. காரோடு என் உயிரும் வந்தது.... இஸ்ரோ நிலவில் கால் பதித்து விட்டது போல மனதுக்குள் ஒரு ஆர்பரிப்பு.
பக்கத்து பிளாட் கார் டிரைவர் பார்த்து கொண்டிருந்தார். 'என்ன சார், கார் வீல் இப்படி உதறுது... பிரெண்ட் வீல்லே ஏதோ ப்ராப்ளம் மாதிரி இருக்கு' ன்னு சொல்லி என்னை பரிதாபமாக பார்த்தார். டிரைவர் சீட் ஜன்னல் வழியாக வீலை பார்த்தேன். தட தட என்று ஆடிக்கொண்டிருந்தது....
Posted by
அப்பு சிவா
4 comments:
kaliyugathil kaar kaatha sozhan nee thaano?
anna,eppo nanga anga ella....only rajesh anna than erukaru,avarum arnold mathiri ella.. so be careful (:
vishnu
காரு அமைவதெல்லாம்..
மெக்கானிக் கொடுத்த வரம்....
ஹிஹி...
very funny one.....laughed a lot as audio with video also played
Post a Comment