'தமிழ் நாட்டில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் 25,000 கொடுக்கணும்' என்று கோபத்துடன் ஒருவர் என்னிடம் சொன்னார்.
'எதற்கு?' என்றேன்.
'அதாங்க 1.76 லட்சம் கோடிய பிரிச்சு நமக்கு கொடுக்க சொல்லணும்'
'அது எதுக்குங்க தமிழ் நாட்டில இருக்கிறவங்களுக்கு மட்டும்?'
'என்னங்க நீங்க வேற, நம்ம ஊரு மந்திரி தான எல்லாதையும் அடிச்சிருக்காரு! அதான் நமக்கு குடுக்கணும். அவ்வளோ பணத்த இவங்களே வச்சுப்பாங்களாமா..."

குற்றம் நடந்ததை விட அதில் எதுவும் தமக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் தான் அவருக்கு அதிகம் இருந்தது. அதிலும் தமிழ் நாட்டுக்கு மட்டும் கிடைக்க வேண்டுமாம். 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்று தெரியாமல் அது அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறது என்று நினைத்துகொண்டிருக்கிறார். அவரை சொல்லி ஒன்றும் இல்லை. நாட்டின் பிரதமரே 'எனக்கு ஒன்றுமே தெரியாது' என்று அறியாமையில் இருக்கும் போது தெருக்கோடியில் இருப்பவருக்கு கோடியில் நடந்த ஊழல் பற்றி அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரிடம் 2ஜி, 3ஜி, எஸ்-பாண்ட் பற்றி எவ்வளவு எதிர் பார்க்க முடியும். அவருக்கு ஓரளவு புரியவைக்க பேசினேன், 'இதெல்லாம் நான் தெரிஞ்சுட்டு என்னத்த செய்யபோறேன்' என்று போய்விட்டார். இது தான் அரசியல்வாதிகளின் பலம்.

குழந்தை ஏதாவது பெரிதாக கேட்டு அழுதால், ஒரு சிறு மிட்டாயை காட்டி எதை கேட்டோமோ அதிலிருந்து மனதை மாற்றி அதை மறக்கச் செய்யும் வித்தை போல் நம் அரசியல்வாதிகளும் மக்களை இலவசங்களுக்கு பழக்கிவிட்டார்கள். சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம் என்று பழகியிருந்த மக்களும் இதற்கு சுலபமாக பழகிவிட்டார்கள். கிட்டதட்ட 23ம் புலிகேசிகள் என்று சொல்ல வேண்டும். அரசியல்வாதிகளை கோடியில் புரளவிட்டுவிட்டு இந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 3000 கொடுப்பார்களாம் 5000 கொடுப்பார்களாம் என்று அற்ப சந்தோஷத்தில் கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். நாம் எப்படியோ நம்மை அப்படி வைத்திருக்கிறார்கள் நம் அரசியல்-வியாதிகள்.

நாமும் அப்படி தான் இருக்கிறோம் நம் அரசும் அப்படித்தான் இருக்கிறது. மழை நீர் வடிகால் கால்வாய் வேலை செய்வதில் மாநகராட்சி காண்ட்ராக்ட்காரர்கள் கடனுக்கு கணக்கு காட்ட வேலை செய்துவிட்டு கழிவு நீர் குழாயையும், குடி நீர் குழாயையும் உடைத்துவிட்டு சரி செய்யாமல், இவர்களே சரி செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். ஏன் என்று கேட்பவர்களுக்கு அலட்சியமாக பதில் வருகிறது. மக்களும் தன் பங்குக்கு அதில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டி பழி தீர்த்து கொள்வதாக சந்தோஷப்படுகிறார்கள். சேற்றில் கல்லெறிந்தால் சேறு நம் மீது தான் படும் என்று சேறு பட்டபின்பும் புரிவதில்லை நம் மக்களுக்கு. குப்பைகளை கொட்டினால் நாளைக்கு நமக்கு தான் பிரச்சனை வரும் என்று நினைப்பதை விட இன்று சந்தோஷம் எதில் என்று தான் பார்க்கிறார்கள்.

ஒரு முறை மதுரை ரயில் நிலையம் முதல் நடைமேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். ஒரு வெளி நாட்டுப் பெண் சர்வ சாதரணமாக ஒரு சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பித்தார். அருகில் உணவு விற்கும் வண்டிக்காரர் அவரை பார்த்து விட்டு ரசித்த படி சிரித்துக் கொண்டார். பெண் புகைப்பிடிப்பதை ரசித்தாரோ என்னவோ, நான் அவரிடம் 'என்னங்க இங்க புகைபிடிக்கக்கூடாது தானே, இவங்க புகைப்பிடிக்கிறாங்களே?' என்று கேட்டேன். 'நாம எப்படிங்க சொல்றது.' என்று கூறிவிட்டு சும்மா இருந்து விட்டார். நான் அந்த பெண்மணியிடம் 'மன்னிக்கவும், இங்கு புகை பிடிக்கக்கூடாது' என்றேன். அவரும் உடனே அணைத்து விட்டு 'மன்னிக்கவும்' என்றார். என்னை பொறுத்தவரை அந்த இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்று அவரை புரியவைக்க தவறியது தான் குற்றம். ரயில் நிலையம் சுத்தமாக பராமரிக்கபடாமல் இருந்தது அவரை அந்த இடத்தில் புகை பிடிப்பது தவறு என்று யோசிக்க வைக்கவில்லை. அதோடு கண் எட்டிய தூரத்தில் 'இங்கு புகை பிடிக்கக்கூடாது' என்ற ஒரு பலகையும் இல்லை. தனி மனிதன் ஆரம்பித்து நம் அரசாங்கம் வரை நாம் சரியாக எதையும் செய்வதில்லை. பின் அடுத்தவரை குறை கூறுவதில் பயனில்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா - நாம் எப்படியோ நமக்கு அப்படி!

தம்பிக்கு எந்த ஊரு?

வரலாறு முக்கியம்